அமெரிக்க பொருட்களுக்கும் 50 சதவீதம் வரி: சசி தரூர்
அமெரிக்க பொருட்களுக்கும் 50 சதவீதம் வரி: சசி தரூர்
ADDED : ஆக 07, 2025 03:33 PM

புதுடில்லி: இந்திய பொருட்களுக்கு வரி விதித்ததற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 50 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.
விதித்த கெடு நிறைவடைவதற்குள், அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை இருமடங்காக அதிகரித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் வரை 25 சதவீதமாக இருந்த வரி, இனி 50 சதவீதமாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இது நியாயமற்ற நடவடிக்கை என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.,யான சசி தரூர் நிருபர்களிடம் கூறியதாவது: அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் 17 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அவர்கள் நமது பொருட்களுக்கு50 சதவீதம் வரி விதிக்கும் போது, நாம் மட்டும் ஏன் 17 சதவீதத்துடன் நிறுத்த வேண்டும் நாமும் வரியை 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.
நமது உறவை மதிக்கிறீர்களா என அவர்களிடம் கேட்க வேண்டும். இந்தியாவைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை என்றால், நாமும் அமெரிக்காவை பற்றி கவலைப்படக்கூடாது.ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்குகிறோம் எனக்கூறி நமக்கு அமெரிக்கா கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கிறது.
ஆனால், ரஷ்யாவிடம் இருந்து சீனா இரு மடங்கு கொள்முதல் செய்கிறது. அவர்களுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கும்போது நமக்கு 3 வாரங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நமக்கு அமெரிக்கா மறைமுகமாக ஏதோ ஒரு செய்தியை அனுப்புகிறது. மத்திய அரசு சூழ்நிலையை புரிந்து கொண்டு உரிய பதிலடி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.