sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பார்லி.,யில் தமிழில் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டு சாதனை!

/

பார்லி.,யில் தமிழில் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டு சாதனை!

பார்லி.,யில் தமிழில் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டு சாதனை!

பார்லி.,யில் தமிழில் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டு சாதனை!

45


UPDATED : டிச 25, 2025 12:53 AM

ADDED : டிச 24, 2025 11:45 PM

Google News

45

UPDATED : டிச 25, 2025 12:53 AM ADDED : டிச 24, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில், பார்லிமென்ட் வரலாற்றிலேயே முதன் முறையாக, லோக்சபா எம்.பி.,க்களின் 160 உரைகள், அவர்களின் தாய்மொழியிலேயே பேசப்பட்டுள்ளன; 50 உரைகள் தமிழில் நிகழ்த்தப்பட்டு உள்ளன. இவற்றின் வாயிலாக, மற்ற மாநில மொழிகளை முந்தி, நம் தமிழ் மொழி முதலிடம் பிடித்துள்ளது.

பார்லி.,யில் ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகள் மட்டுமே பேச முடியும். இந்த மொழிகள் தெரியாதவர்கள், தாய்மொழிகளில் பேச முடியாத நிலை இருந்தது. நீண்ட காலமாகவே இந்த பிரச்னை இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன், தமிழிலும் பேசலாம் என்ற நிலை உருவானது. ஆனால், எடுத்த எடுப்பிலேயே பேச முடியாது.

மொழிபெயர்ப்பு


மாறாக, சம்பந்தப்பட்ட எம்.பி.,க்கள், இந்த மொழியில் பேசப் போவதாக லோக்சபா செயலகத்திற்கு முன்கூட்டியே தகவல் தர வேண்டும். அந்த எம்.பி., பேசும் போது மட்டும், மொழிபெயர்ப்பாளர் அமர்த்தப்படுவார். அவர், தமிழ் உரையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார்.

அதை ஹிந்தியில் மொழிபெயர்த்து மற்றொருவர் கூறுவார். இப்படி தான், அந்த தமிழ் உரையை, மற்ற எம்.பி.,க்களால் ஹிந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ கேட்க முடியும். மற்ற மொழிகளுக்கும் இதே நிலை தான்.

இதனால், சபை நடவடிக்கைகளில் மாநில மொழிகளில் பேசுவது என்பது, எம்.பி.,க்களுக்கு சிரமமாக இருந்தது. சபாநாயகராக ஓம் பிர்லா வந்தவுடன், இந்த நிலையை, முதற்கட்டமாக லோக்சபாவிலாவது மாற்ற வேண்டுமென முடிவு செய்து, அதற்கான பணிகளை துவங்கினார்.

சோதனை ஓட்டம்


முதற்கட்டமாக, 2023ல் குளிர்கால கூட்டத்தொடரில், லோக்சபா நடவடிக்கைகளில், ஒவ்வொரு நாளும் கேள்வி நேரத்தின் போது மட்டும், இந்த மொழி பெயர்ப்பு முயற்சி துவங்கப்பட்டது. அப்போது, வெறும் 10 மொழிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு, மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. பின், 12 மொழிகளாக அதிகரிக்கப்பட்டன.

ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக மொழி பெயர்ப்பாளர்களை பணியில் அமர்த்தி, கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடந்தது. சில தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்த நிலையில், அவையும் சரி செய்யப்பட்டன. இதன் பலனாக, கடந்த குளிர் கால கூட்டத்தொடரில், மாநில மொழிகளுக்கான முன்னுரிமை உறுதி செய்யப்பட்டது.

அதாவது, அரசியலமைப்பு சட்டத்தில், அலுவல் மொழிகளாக அதிகாரப்பூர்வமாக, 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 22 மொழிகளிலும், லோக்சபாவில் மொழி பெயர்க்கப்படும் அளவுக்கு, சமீபத்தில் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் சூழ்நிலைகள் மேம்படுத்தப்பட்டன.

இதற்காக மொத்தம், 84 மொழி பெயர்ப்பாளர்கள் பணி அமர்த்தப்பட்டனர். ஹிந்தி, ஆங்கிலம் தவிர, போடோ, மணிப்பூரி, சந்தாலி, அசாமி, உருது, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில், கடந்த கூட்டத்தொடரில், மொத்தம் 37 எம்.பி.,க்கள் பேசியுள்ளனர்.

பல்வேறு மொழிகளில் மொத்தம், 160 உரைகள் இந்த கூட்டத்தொடரில் எம்.பி.,க்களால் நிகழ்த்தப்பட்டுள்ளன. இவற்றில், 50 உரைகள் தமிழில் நிகழ்த்தப்பட்டன. அடுத்தபடியாக, 43 உரைகள் மராத்தியில் பேசப்பட்டுள்ளன; 25 உரைகளுடன் பெங்காலி மூன்றாம் இடத்தில் உள்ளதாக லோக்சபா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் எனும் இன்ப தேனை காதில் பாய்ச்சிய எம்.பி.,க்கள்


தமிழக எம்.பி.,க்களில் திருமாவளவன், பிரகாஷ், வெங்கடேசன், ஈஸ்வரசாமி, செல்வராஜ், தங்கத்தமிழ்ச்செல்வன், துரை வைகோ, சுப்பராயன், நவாஸ் கனி, வைத்திலிங்கம் போன்றவர்கள், வழக்கமாகவே சபையில் தமிழில் தான் பேசுவர். இந்த முறையும் அப்படியே பேசினர். ஆனால், எப்போதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசக்கூடிய கனிமொழி, தயாநிதி, பாலு ஆகியோர் இம்முறை தமிழில் பேசினர். தவிர, ரவிகுமார், மலையரசன், அண்ணாதுரை, செல்வம், தரணிவேந்தன், முரசொலி ஆகியோரும், இம்முறை தமிழில் பேசினர்.
தமிழச்சி தங்கபாண்டியன், ஒரேயொரு முறை மட்டும் தமிழில் பேசினார். ராஜா, அருண் நேரு, கார்த்தி, ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த், கலாநிதி வீராசாமி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினரே தவிர, தமிழில் ஒருமுறை கூட பேசவில்லை. ராணி ஸ்ரீகுமார், சுதா ஆகியோர் ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசினர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை தி.மு.க., - எம்.பி., பாலு கிளப்பியபோது, அவருக்கு பதிலடி தரும் வகையில், பார்லி., விவகார இணை அமைச்சர் முருகன் தமிழில் பேசினார்.



பிரதமருக்கு நன்றி!


தமிழக பா.ஜ., தலைவர், நயினார் நாகேந்திரன்: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில், 160 உரைகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் அல்லாத பிற இந்திய மொழிகளில் நிகழ்த்தப்பட்டன; 50 உரைகள் இன்பத் தமிழ் மொழியில் நிகழ்த்தப்பட்டன. ஹிந்தி திணிப்பு என, போலியாக கூப்பாடு போட்டு, குட்டிக்கரணம் அடிக்கும், தி.மு.க., அரசின் மொழி அரசியலுக்கு, இது மீண்டுமொரு சவுக்கடி. நாட்டின் 22 அலுவல் மொழிகளிலும், நேரடி மொழிபெயர்ப்பை ஏற்படுத்தி தந்த சபாநாயகர் மற்றும் இந்திய மொழிகளை போற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி.



- நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us