ராஜஸ்தானில் 500 பறவைகள் பலி: 'பாக்டீரியா' பாதிப்பால் பரிதாபம்
ராஜஸ்தானில் 500 பறவைகள் பலி: 'பாக்டீரியா' பாதிப்பால் பரிதாபம்
ADDED : நவ 10, 2024 12:12 AM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இனப்பெருக்கத்துக்காக வந்த, 500 வெளிநாட்டு பறவைகள், பாக்டீரியா பாதிப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து, 80 கி.மீ., தொலைவில் சாம்பர் ஏரி அமைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய உப்பு ஏரிகளில் ஒன்றான இது, வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வந்து செல்லும் இடமாக உள்ளது.
அதிர்ச்சி
குளிர்காலம் துவங்கும் முன் இங்கு வரும் பறவை இனங்கள், ஏரி மற்றும் அதன் கரையோரங்களில் வசிப்பதுடன், குஞ்சு பொரித்து முட்டையிடுவதை வழக்கமாக வைத்துள்ளன.
கடந்த 2019ம் ஆண்டின் துவக்கத்தில், 13 - 15 இனங்களைச் சேர்ந்த, 18,000 பறவைகள் இங்கு புலம் பெயர்ந்து வந்ததாக சான்றுகள் கூறுகின்றன.
இந்த ஆண்டும், கடந்த பிப்ரவரி முதல் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் ஏரியில் முகாமிட்டு வருகின்றன.
இந்நிலையில், இங்கு வசித்து வந்த வெளிநாட்டு பறவைகள், கடந்த சில நாட்களாக கொத்து கொத்தாக உயிரிழந்தன.
கால்கள் மற்றும் இறகுகள் செயலிழந்த நிலையில் அவை இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மீட்புக் குழு
கடந்த 15 நாட்களில், இதுவரை 520 வெளிநாட்டு பறவைகள் இறந்ததை அடுத்து, அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பறவைகளின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள பறவைகள் ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதன் முடிவில், பறவைகள் ஒருவித பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு இருப்பதும், இதனாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
'கிளோஸ்ட்ரிடியம் போட்லினம்' என்ற அந்த பாக்டீரியா, பறவைகளின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நச்சுத் தன்மையை வெளியிடுவதும், அதனால் அவற்றின் இறகுகள் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பாக்டீரியா பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பறவைகள், மித்ரியில் உள்ள மீட்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு பறவைகளை பாதுகாத்து, சிகிச்சை அளிப்பதற்காக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய பேரிடர் மீட்புக் குழுவும் மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
ஏரி பகுதி முழுதும், பாக்டீரியா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.