500 கர்நாடக பப்ளிக் பள்ளிகள்- அமைச்சர் மது பங்காரப்பா அறிவிப்பு
500 கர்நாடக பப்ளிக் பள்ளிகள்- அமைச்சர் மது பங்காரப்பா அறிவிப்பு
ADDED : நவ 01, 2024 11:21 PM

பெங்களூரு ; ''கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதியுதவியில், மாநிலத்தில் 500 கர்நாடக பப்ளிக் பள்ளிகள் திறக்கப்படும். முதற்கட்டமாக 100 பள்ளிகள் திறக்க, ஏற்பாடு நடக்கிறது,'' என தொடக்க, உயர்நிலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
பெங்களூரின், கன்டீரவா விளையாட்டு அரங்கில், கன்னட ராஜ்யோத்சவா நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில் அமைச்சர் மது பங்காரப்பா பேசியதாவது:
அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை அதிகரிக்க, பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி உள்ளது. இதற்காக பல சங்கங்கள், அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. சிறார்களின் கல்விச்சுமையை குறைக்க, பாட புத்தகங்கள் செமஸ்டர்களை போன்று பிரிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி மொழி
கர்நாடகாவில் கன்னடமே, ஆட்சி மொழியாகும். மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க, அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளது. மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும், கட்டாயமாக கன்னடம் முதலாவது மற்றும் இரண்டாவது மொழியாக போதிக்கப்படுகிறது.
சிறார்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், முட்டை, வாழைப்பழம், பால், ராகி மால்ட் வழங்கப்படுகிறது. 'நமது பள்ளி நமது பொறுப்பு' என்ற பெயரில், ஒவ்வொரு பள்ளியிலும், பழைய மாணவர்கள் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சங்கத்தில் இணைய பலர் முன் வந்துஉள்ளனர்.
அடிப்படை வசதி
பள்ளி வளர்ச்சியில், பொது மக்களும் கை கோர்த்துள்ளனர். அரசு பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறது. 115 கோடி ரூபாய் செலவில், 784 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு தேவையான கழிப்பறைகள் கட்ட, 122.75 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதியுதவியில், மாநிலத்தில் 500 கர்நாடக பப்ளிக் பள்ளிகள் திறக்கப்படும். முதற்கட்டமாக 100 பள்ளிகள் திறக்க, ஏற்பாடு நடக்கிறது.
மாநிலத்தின் 5,716 பள்ளிகளில், 13,832 வகுப்பறைகளை பழுது பார்க்க, 150 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சிறந்த கல்வி, தன்னம்பிக்கை, கூடி வாழ்வது, சுற்றுச்சூழல் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படாமல், 42,817 கவுரவ ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 1008 நர்சரி பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. 36,658 மாணவர்கள் அட்மிஷன் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.