வயல்களுக்கு தீ வைப்பதை தவிர்க்க 5,000 ஏக்கருக்கு உயிரி கரைசல்
வயல்களுக்கு தீ வைப்பதை தவிர்க்க 5,000 ஏக்கருக்கு உயிரி கரைசல்
ADDED : அக் 03, 2024 07:21 PM

புதுடில்லி:சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 5,000 ஏக்கரில் அறுவடை எச்சங்களை உயிரி தொழில்நுட்பத்தின் மூலம் மக்கச் செய்வதற்கு மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
டில்லி உள்ளிட்ட தேசிய தலைநகர் பிராந்தியத்தில் குளிர்காலம் வந்தாலே காற்று மாசுபாடு பிரச்னை அதிக அளவில் தலைதுாக்கும். அதைத் தவிர்க்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது.
இந்த ஆண்டு 21 அம்ச திட்டத்தை மாநில அரசு செயல்படுத்துகிறது. டில்லியை சுற்றியிருக்கும் விவசாயிகள், நெல் உள்ளிட்ட தானியங்களை அறுவடை செய்த பின், தங்கள் வயலுக்கு தீவைப்பது வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இது தேசிய தலைநகர் பிராந்தியத்தின் காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. இதைத் தவிர்க்கும்படி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வயல்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் படிப்படியாக குறைகின்றன
எனினும் முற்றிலும் இது ஒழிக்கப்படவில்லை. இதையடுத்து வயல்களில் அறுவடைக்குப் பின் எஞ்சியிருக்கும் எச்சங்களை உயிரி தொழில்நுட்பத்தில் மக்கச் செய்யும் முறையை நேற்று மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் விவசாயிகளுக்கு விளக்கினார்.
ட்ரோன் கொண்டு உயிரி கரைசல் தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நேரடியாகவும் ட்ரோன்களை கொண்டும் வயல்களில் உயிரி கரைசல் தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு டில்லியைச் சுற்றி 5,000 ஏக்கருக்கும் அதிகமான வயல்களில் உயிரி கரைசல் வாயிலாக பயிர் எச்சங்களை மக்கச் செய்ய மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

