மகரஜோதி பாதுகாப்புக்கு 5000 போலீஸ் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை
மகரஜோதி பாதுகாப்புக்கு 5000 போலீஸ் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை
ADDED : ஜன 11, 2025 10:49 PM
சபரிமலை:''சபரிமலையில் மகரஜோதி தரிசனம் சுமூகமாக நடைபெறுவதற்கு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்''என கேரள டி.ஜி.பி. ஷேக் தர்வேஷ் சாகிப் கூறினார்.
சபரிமலை மற்றும் பம்பையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 1800 போலீசார் சன்னிதானத்திலும், 800 பேர் பம்பையிலும், 700 பேர் நிலக்கல்லிலும், 150 பேர் இடுக்கியிலும், 650 பேர் கோட்டயத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மத்திய அதிவிரைவு படையினர், தேசிய பேரிடர் நிவாரண படையினர் உள்ளிட்டோரும் பணியில் உள்ளனர். மகரஜோதியை பக்தர்கள் சிரமம் இல்லாமல் பார்க்கவும், அதன் பின்னர் பாதுகாப்பாக ஊர் திரும்பவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவாபரண பவனிக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு எஸ்.பி., 12 டி.எஸ்.பி.,க்கள், 31 இன்ஸ்பெக்டர்கள், 1440 போலீசார் இதற்கான பாதுகாப்பு சிறப்பு படையில் உள்ளனர்.
ஜன. 14 ல் மகர ஜோதி தெரியும் அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனை உயரதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர். அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் இன்று சபரிமலையில் நடைபெறும்.
சன்னிதானத்தில் ஏ.டி.ஜி.பி., எஸ்.ஸ்ரீஜித், பம்பையில் தென் மண்டல ஐ.ஜி., ஷியாம் சுந்தர், நிலக்கல்லில் டி.ஐ.ஜி., அஜிதா பேகம், எருமேலி, இடுக்கி பகுதியில் எர்ணாகுளம் டி.ஐ.ஜி., சதீஷ் பினு தலைமையில் போலீசார் பாதுாப்பு பணியில் ஈடுபடுவர்.
ஜோதி தரிசனம் முடிந்தவுடன் பக்தர்கள் வெளியேறும் பாதைகளும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எக்சிட் பிளான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெரிசல் ஏற்பட்டால் எக்சிட் பிளான் பயன்படுத்தப்பட்டு பக்தர்கள் சுமூகமாக அனுப்பப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

