ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை 'தாம் துாம்'
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை 'தாம் துாம்'
ADDED : டிச 24, 2025 12:17 AM

புவனேஸ்வர்: ஒடிஷாவில், வனத்துறை ரேஞ்சர்களுக்கு, 7 கோடி ரூபாய் செலவில், 51 ஜீப்களை வாங்கி அவற்றை மேலும் 5 கோடி ரூபாய் செலவு செய்து சீரமைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறை ரேஞ்சர்கள் வனப்பகுதிக்குள் சென்று சோதனை செய்வதற்காக கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், 7 கோடி ரூபாய் செலவில் 51 மஹிந்திரா தார் ஜீப்கள் வாங்கப்பட்டன.
அந்த வாகனத்தில் விளக்குகள், கேமரா உள்ளிட்டவற்றை பொருத்த மேலும் 5 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனங்களின் மொத்த விலை, 12 கோடி ரூபாயாக உயர்ந்தது.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக சிறப்பு தணிக்கை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கணேஷ் ராம் சிங், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் வாகன கொள்முதல் மற்றும் சீரமைப்பு குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அமைச்சர் கணேஷ் ராம் சிங் மேலும் கூறியதாவது: வனத்துறையினர் காட்டுக்குள் சென்று சோதனையிட வாகனங்களில் சில மாற்றங்கள் செய்வது அவசியம். ஆனால் அதிகப்படியான, நியாயமற்ற செலவினத்தை ஏற்க முடியாது.
கேமராக்கள், கூடுதல் விளக்குகள், சைரன்கள், வலுவான டயர்கள் போன்றவை வாகனத்தில் மாற்றப்பட்டது அவசியம் தானா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். கூடுதலாக பொருத்தப்பட்ட கருவிகள் தேவையில்லை என தெரியவந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

