சபரிமலையில் 52 லட்சம் பக்தர்கள் தரிசனம் தேவசம்போர்டு தகவல்
சபரிமலையில் 52 லட்சம் பக்தர்கள் தரிசனம் தேவசம்போர்டு தகவல்
ADDED : பிப் 04, 2024 02:55 AM
கம்பம்,: சபரிமலை ஐயப்பன் கோயிலில் சமீபத்தில் முடிந்த மண்டல பூஜை, மகர ஜோதி சீசனில் 52 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் கார்த்திகை 1 ல் நடைதிறக்கப்பட்டு மண்டல பூஜை, மகரஜோதி சீசனையொட்டி 2 மாதங்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இதில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிப்பர்.
சமீபத்தில் முடிந்த மண்டல பூஜை, மகரஜோதி சீசனில் எந்தாண்டும் இல்லாத வகையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
அதேநேரம் அவர்களுக்கு சரியான வசதிகள் செய்து தரவில்லை. பலர் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி விட்டனர். போலீசாரால் தாக்கப்பட்டனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதை மறுத்து தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், ' சபரிமலையில் இந்த மண்டல பூஜை, மகரஜோதி சீசனில் 52 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றுள்ளனர். பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் சமூகவலைதளத்தில் திட்டமிட்டு பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டது. 2023-2024 நிதியாண்டில் ரூ .30 கோடி செலவில் எருமேலி , நிலக்கல், செங்கனூர், மணியங்கோடு, கால கூட்டம், சிரங்கரா பகுதிகளில் சபரிமலை வரும் பக்தர்களுக்கென அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளது 'என தெரிவிக்கப்பட்டுள்ளது.