இந்தியாவில் ஒரே ஆண்டில் 54 லட்சம் பேர் இடம்பெயர்வு
இந்தியாவில் ஒரே ஆண்டில் 54 லட்சம் பேர் இடம்பெயர்வு
ADDED : மே 14, 2025 03:05 AM
புதுடில்லி, : ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரை தளமாகக் கொண்ட உள்நாட்டு இடம்பெயர்வு கண்காணிப்பு மையம், கடந்த ஆண்டில் இந்தியாவில் நடந்த இடம்பெயர்வு குறித்து வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் பெரும்பாலான இடம்பெயர்வுக்கு வெள்ளமே முக்கிய காரணம். மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களால், 1,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
காலநிலை மாற்றம், காடழிப்பு, அணைகள் மற்றும் கரைகள் பராமரிக்கப்படாததால் ஏற்பட்ட பாதிப்புகளாலும் மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டில் அசாமில் மட்டும், 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட மிகக் கடுமையான வெள்ளம் காரணமாக, 25 லட்சம் பேர் வேறு இடங்களைத் தேடி சென்றுள்ளனர்.
புயல்கள் காரணமாக, 16 லட்சம் பேர் இருப்பிடத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலம், 40 ஆண்டுகளில் இல்லாத மோசமான பருவமழையை 2024ல் கண்டது. ஒட்டு மொத்தமாக கடந்தாண்டில் மட்டும், 54 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்; இது 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.