தேசிய நீரோட்டத்தில் தீவிரவாதிகள்; திரிபுராவில் 584 பேர் சரண்: ஆயுதங்கள் ஒப்படைப்பு
தேசிய நீரோட்டத்தில் தீவிரவாதிகள்; திரிபுராவில் 584 பேர் சரண்: ஆயுதங்கள் ஒப்படைப்பு
ADDED : செப் 25, 2024 08:00 AM

அகர்தலா: வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 584 தீவிரவாதிகள் முதல்வர் மாணிக் சாஹா முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தனர்.
திரிபுராவில் செயல்பட்டு வந்த திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, திரிபுரா புலிப் படை தீவிரவாத அமைப்புகளுக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய ஒப்புக் கொண்டனர்.
584 பேர் சரண்
அதன்படி, திரிபுரா மாநில ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில், 584 தீவிரவாதிகள் முதல்வர் மாணிக் சாஹா முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தனர். இது குறித்து முதல்வர் மாணிக் சாஹா கூறியதாவது: பழங்குடியினரின் அனைத்துத் துறை வளர்ச்சி மற்றும் நலனுக்காக மத்திய அரசும் மாநில அரசும் முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
கிளர்ச்சி அழிந்தது!
சரணடைவதற்கு முன் சட்ட விரோதமாக பல ஆண்டுகளாக தொந்தரவான வாழ்க்கையை நடத்திய அந்த இளைஞர்களை, வாழ்க்கையில் மாற்றம் நிகழப்போவதை நான் வரவேற்கிறேன். வன்முறை மற்றும் பயங்கரவாதத்தால் எந்த வளர்ச்சியும் சாத்தியமில்லை . நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் அமைதி இன்றியமையாதது.
அது இல்லாமல் எந்த சமூகமும் வளர்ச்சியடையாது. தீவிரவாதிகள் சரணடைந்ததால் கிளர்ச்சி முற்றிலுமாக அழிந்தது. இவ்வாறு அவர் கூறினார். சரணடைந்த தீவிரவாதிகளின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.250 கோடி ஒதுக்கி உள்ளது.