எம்.எல்.ஏ.,வால் அச்சுறுத்தல் எஸ்.பி.,க்கு 59 ஏட்டுகள் கடிதம்
எம்.எல்.ஏ.,வால் அச்சுறுத்தல் எஸ்.பி.,க்கு 59 ஏட்டுகள் கடிதம்
ADDED : பிப் 17, 2024 05:12 AM

ராய்ச்சூர் : தேவதுர்கா எம்.எல்.ஏ., கரெம்மாவிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு கோரி 59 ஏட்டுகள், மாவட்ட எஸ்.பி.,யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராய்ச்சூர், தேவதுர்கா ம.ஜ.த., -- எம்.எல்.ஏ., கரெம்மா. இவரது மகன் சந்தோஷும், உதவியாளர்கள் ரபி, இலியாஸ் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, தேவதுர்கா போலீஸ் நிலைய ஏட்டு ஹனுமந்தராயா, ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மணல் கடத்திய டிராக்டரை வழிமறித்தார்.
அப்போது இவருக்கும், எம்.எல்.ஏ., கரெம்மாவின் மகன் சந்தோஷுக்கும் வாக்குவாதம் நடந்தது. ஏட்டுவை சந்தோஷும், அவரது உதவியாளர்கள் ரபியும், இலியாசும் தாக்கினர். இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு மணல் கடத்தலுக்கு எதிராக குரல் கொடுத்த கரெம்மா, தற்போது இதே குற்றத்தை செய்யும் மகனுக்கு ஆதரவாக இருப்பதாக பலரும் சாடினர்.
'எம்.எல்.ஏ., கரெம்மாவும், இவரது மகன் மற்றும் ஆதரவாளர்கள், எங்களின் கடமையில் குறுக்கிடுகின்றனர். மிரட்டல் விடுக்கின்றனர். இவர்களால் எங்களுக்கு அபாயம் உள்ளது. உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' எனகோரி, தேவதுர்கா தொகுதியின், போக்குவரத்து பிரிவு, சட்டம், ஒழுங்கு பிரிவின் 59 ஏட்டுகள், ராய்ச்சூர் மாவட்ட எஸ்.பி., நிகிலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.