மனித வேட்டை ஓநாய்களில் ஒன்று மட்டும் சிக்கியது; தொடர்கிறது ஆபரேஷன் பேடியா!
மனித வேட்டை ஓநாய்களில் ஒன்று மட்டும் சிக்கியது; தொடர்கிறது ஆபரேஷன் பேடியா!
ADDED : செப் 10, 2024 09:42 AM

பஹ்ரைச்; உ.பி.,யில் மக்களை அச்சுறுத்தி வந்த ஆட்கொல்லி ஓநாய் கூட்டத்தில் மேலும் ஒரு ஓநாயை வனத்துறையினர் சரியான திட்டமிடல் மூலம் பிடித்துள்ளனர்.
அட்டாக்
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதி கடந்த 45 நாட்களுக்கும் மேலாக அல்லோலப்பட்டு கொண்டிருக்கிறது. சிறுவர்களையும், குழந்தைகளையும் குறித்து வைத்து அட்டாக் செய்யும் ஓநாய்களால் மக்கள் தூக்கமின்றி பீதியில் நாட்களை கழித்தனர். ஆட்கொல்லி ஓநாய் தாக்குதலுக்கு இதுவரை 8 சிறுவர்கள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர்.
ஆபரஷேன் பேடியா
இதையடுத்து ஆட்கொல்லி ஓநாயை பிடிக்க ஆபரேஷன் பேடியா என்ற தேடுதல் வேட்டையில் அதிகாரிகள் இறங்கினர். கிராம பகுதிகளில் ட்ரோன் மூலம் ஓநாய்கள் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். தொடர் தேடுதல் வேட்டையின் எதிரொலியாக 4 ஓநாய்கள் பிடிக்கப்பட்டன.
திட்டம்
இந்நிலையில் தற்போது 5வது ஓநாய் ஒன்றை வனத்துறையினர் பிடித்துள்ளனர். இந்த ஓநாயை பிடிக்க அவர்கள் பல்வேறு திட்டங்களை தீட்டியிருக்கின்றனர். இது குறித்து தலைமை வனப்பாதுகாவலர் ரேணு சிங் கூறி இருப்பதாவது;
5வது ஓநாய்
மிகப்பெரிய வெற்றி. இதற்கு முன்பு 4 ஓநாய்கள் பிடிபட்டன. இப்போது 5வது ஓநாய் பிடிபட்டுள்ளது. வனத்துறையினர் மிக சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். 5வது ஓநாயை பிடிக்க மேற்கொண்ட முயற்சி சுவாரசியங்கள் நிறைந்தது.
ட்ரோன்
நதுவாபூரில் உள்ள ஆட்டை இந்த ஓநாய் தூக்கியது. இதையறிந்து வலைகளை தயாராக வைத்து காத்திருந்தோம். எதிர்பார்த்தபடியே ஓநாய் வலையில் சிக்கியது. இதற்கு முன்பு ஓநாய்கள் மிகவும் சமயோசிதமாக தப்பித்துக் கொண்டன. ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடுவதை உணர்ந்து கொண்ட அவை, லாவகமாக ஓடி தப்பித்தன.
வேறு திட்டம்
இம்முறை ஆட்டை தூக்கிக் கொண்டு ஓடியபோது வேறு திட்டத்தை செயல்படுத்தினோம். ட்ரோனை இயக்குவதை நிறுத்தி, அவை செல்லும் பாதைகளை கண்டறிந்து அங்கெல்லாம் வலைகளை அமைத்தோம். இரவை தவிர்த்து காலையில் வேட்டையை ஆரம்பித்தோம். அதன் பலனாக ஓநாய் வசமாக சிக்கியது.
மிருகக்காட்சி சாலை
பிடிபட்ட ஓநாய் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு செல்லப்படும். இன்னும் ஒரு ஓநாய் மட்டும் இருக்கிறது. கூடிய விரைவில் அதையும் பிடித்துவிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.