கோவா திருவிழாவில் நெரிசல்: 6 பக்தர்கள் பலி; 70 பேர் காயம்
கோவா திருவிழாவில் நெரிசல்: 6 பக்தர்கள் பலி; 70 பேர் காயம்
ADDED : மே 04, 2025 01:13 AM

பணஜி: கோவாவில், கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர்; 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைநகர் பணஜியில் இருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள சிர்காவோ கிராமத்தில் ஸ்ரீ லைரை தேவி கோவிலில் வருடாந்திர திருவிழா நடைபெறுகிறது.
தீமிதி விழா
பாரம்பரியமிக்க இந்த திருவிழா ஆறு நாட்கள் நடைபெறும். இதில் கலந்து கொள்ள கோவா மற்றும் மஹாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.
கிராமத்தில் கோவிலை சுற்றியுள்ள பாதைகள் குறுகலாக இருந்தன. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு தீமிதி விழா நடைபெற்றது. விரதம் இருந்த ஆண்கள் தீ மிதிக்க துவங்கினர்.
அப்போது, திடீரென கூட்டம் அதிகரித்து, 100க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கினர். பலர் கீழே விழுந்ததால், ஒருவர் மீது ஒருவர் மிதித்ததில், அந்த இடம் முழுதும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்; 70க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சிர்காவோ கிராமத்தில் நடந்த இந்த திருவிழாவில், 50,000 பேர் பங்கேற்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிவான பாதையொன்றில் நின்றிருந்த சிலர், திடீரென சறுக்கி ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் நெரிசல் ஏற்பட்டதாக கோவா டி.ஜி.பி., அலோக் குமார் தெரிவித்தார்.
எனினும், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த முதல்வர் பிரமோத் சாவந்த், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுஉள்ளார்.
மின் கசிவு
கோவாவில் அடுத்து மூன்று நாட்களுக்கு அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
பிரமோத் சாவந்த் கூறுகையில், ''மின் கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியதால் கூட்டத்தில் இருந்தவர்களிடையே பீதி ஏற்பட்டு, அதன் காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், உண்மையான காரணம் குறித்து விசாரணைக்கு பின்பே தெரிய வரும்,'' என்றார்.
இதற்கிடையே, அரசின் அலட்சியம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் கவனக் குறைவே உயிரிழப்புக்கு காரணம் என எதிர்க்கட்சிகளான காங்., திரிணமுல் காங்., கோவா பார்வர்டு கட்சி உள்ளிட்ட கட்சியினர் குற்றஞ்சாட்டிஉள்ளனர்.
விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்து, தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்திஉள்ளனர்.