ADDED : ஏப் 09, 2025 10:58 PM
புதுடில்லி:மது போதையில் தாறுமாறாக ஓட்டி வந்த கார் மோதி, ஆறு பேர் காயம் அடைந்தனர். கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மத்திய டில்லி பழைய ராஜீந்தர் நகரில் நேற்று முன் தினம் மாலை, ஒரு கார் தாறுமாறாக வந்தது. சாலையோரமாக நடந்து சென்றவர்கள் அலறியடித்து ஓடினர். அந்தக் கார் திடீரென சாலையில் இருந்து நடைபாதை மீது ஏறியது. அங்கு நடந்து சென்று கொண்டிருந்த லோகேஷ், பேபி, சிவம், ஹர்ஷிதா, ஸ்டீபன் மற்றும் விபுல் ஆகிய
ஆறு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில், விபுல் தவிர மற்ற ஐந்து பேரும், யு.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
காரை தடுத்தி நிறுத்திய பொதுமக்கள், அதன் டிரைவர் பிரேம் குமார்,45, என்பவரை போலீசில் ஒப்படைத்தனர். அவர் மது குடித்து இருந்ததைக் கண்டுபிடித்த போலீசார், அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தி சான்றிதழ் பெற்றனர். விசாரணை நடக்கிறது.

