ADDED : பிப் 22, 2024 11:20 PM
பெலகாவி: வேகமாக வந்த கார், மரத்தில் மோதியதில் ஆறு பேர் பலியாகினர்.
பெலகாவி, கானாபுராவின், மங்கேனகொப்பதஹத்தி அருகில், நேற்று மதியம் கார் ஒன்று வேகமாக சென்றது. கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தின் மீது மோதியது. அதில் பயணம் செய்த தார்வாடின் கார் ஓட்டுனர் ஷாருக் பென்டாரி, 30, இக்பால் ஜமாதார், 50, ஹாவேரியை சேர்ந்த சானியா லங்கோடி, 37, உம்ரா பீகம் லங்கோடி, 17, ஷபனம் லங்கோடி, 37, பரான் லங்கோடி, 13, ஆகிய ஆறு பேர் உயிரிழந்தனர்.
நால்வர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.
கானாபுராவின், கோல்யாளா கிராமத்தில் நேற்று உறவினர் இல்லத்தின் திருமணம் இருந்தது. இதில் பங்கேற்பதற்காக தார்வாட், ஹாவேரியை சேர்ந்தவர்கள் காரில் புறப்பட்டனர். திருமணம் சம்பந்தப்பட்ட சில முக்கியமான பொருட்கள், இவர்கள் காரில் கொண்டு செல்லப்பட்டன.
உறவினர் போன் செய்து விரைவில் வரும்படி கூறியுள்ளார். இதனால் ஓட்டுனர் அதிவேகமாக காரை ஓட்டினார். இதுவே விபத்துக்கு காரணமானது. சம்பவ இடத்தை பெலகாவி மாவட்ட எஸ்.பி., பீமா சங்கர் குளேத், நேரில் பார்வையிட்டார்.
நந்தகடா போலீசார் விசாரிக்கின்றனர்.