துாங்கிய கார் டிரைவரால் விபத்து சத்தீஸ்கரில் 6 பேர் உயிரிழப்பு
துாங்கிய கார் டிரைவரால் விபத்து சத்தீஸ்கரில் 6 பேர் உயிரிழப்பு
ADDED : ஆக 16, 2025 12:35 AM
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், சுற்றுலா பயணியரை ஏற்றிச் சென்ற கார், எதிரே வந்த லாரி மீது மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர்; மேலும் ஒருவர் காயம் அடைந்தார்.
மத்திய பிரதேசத்தின் இந்துார் பகுதியைச் சேர்ந்த, 25 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஏழு நண்பர்கள், காரில் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் உஜ்ஜைன் பகுதியைச் சுற்றி பார்த்த பின், ஒடிஷாவின் புரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
சத்தீஸ்கரின், ராஜ்நந்த்காவ்ன் பகுதியில் உள்ள சிர்சரி கிராமம் அருகே, நேற்று அதிகாலை கார் சென்றபோது, டிரைவர் துாங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் மறுபக்கம் சென்றது. அப்போது எதிரே வந்த லாரி மீது கார் மோதியது.
இதில் பயணித்த ஐந்து பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயம் அடைந்த இருவரை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; அங்கு, சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார்.
இதனால் பலி எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்தது; மற்றொருவர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.