ரோப் கார் கேபிள் அறுந்து குஜராத்தில் 6 பேர் உயிரிழப்பு
ரோப் கார் கேபிள் அறுந்து குஜராத்தில் 6 பேர் உயிரிழப்பு
ADDED : செப் 07, 2025 02:57 AM

ஆமதாபாத் : குஜராத்தின் மலைக்கோவில் பாதையில் இயங்கிய, 'ரோப் கார் கேபிள்' அறுந்து விழுந்ததில், ஆறு பேர் உயிரிழந்தனர்.
குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ளது பவகாத் மலை 2,624 அடி உயரத்தில் உள்ள இந்த மலையின் மீது காளிகா மாதா கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, 'ரோப் கார்' இயக்கப்படுகிறது. மோசமான வானிலையால் இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மலைக்கோவிலில் மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக சரக்குகளை ஏற்றிச் செல்ல ரோப் கார் நேற்று இயக்கப்பட்டது.
இந்த ரோப் காரில் கட்டுமான பொருட்களுடன் காஷ்மீரைச் சேர்ந்த ரோப் கார் ஆப்பரேட்டர்கள் முகமது அன்வர், பல்வந்த் சிங் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி அன்னாஜி, கோவில் ஊழியர்கள் நர்வத் சிங் கோலி, பாரியா, பூ வியாபாரி சுரேஷ்பாய் கோலி ஆகிய ஆறு பேர் சென்றனர்.
அப்போது திடீரென கேபிள்கள் அறுந்து விழுந்ததில், ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரோப் காரில் அளவுக்கு அதிகமாக சரக்கு மற்றும் ஆட்கள் ஏற்றி செல்லப்பட்டதா அல்லது பராமரிப்பின்றி விபத்து நிகழ்ந்ததா என, போலீசார் விசாரிக்கின்றனர்.