ADDED : பிப் 04, 2025 06:39 AM
சாம்ராஜ்நகர்: காது குத்துவதற்காக மயக்க ஊசி போட்டதில், 6 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
சாம்ராஜ்நகர், குண்டுலுபேட்டின், ஷெட்டிஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஆனந்த். இவரது மனைவி சுபா. ௬ மாதங்களுக்கு முன்பு தான் சுபாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சிக்கு நேற்று தம்பதியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
காது குத்தும்போது, குழந்தைக்கு வலி தெரியாமல் இருக்கும் நோக்கில், பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள டாக்டர் நாகராஜு, குழந்தையின் இரண்டு காதுகளிலும், 'அனஸ்தீஷியா' எனும் மயக்க மருந்து ஊசி போட்டார். 200 ரூபாய் கட்டணம் பெற்றுக் கொண்டார்.
அனஸ்தீஷியா அதிக வீரியம் கொண்டதாக இருந்ததால், குழந்தையின் வாயில் நுரை வந்தது. உடனடியாக தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர்.
பெற்றோரும் குழந்தையை அங்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்திலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறினர். ஆத்திரமடைந்த பெற்றோர், ஆரம்ப சுகாதார மைய டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.