மூடி இருக்கும் ரயில்வே 'கேட்' கடக்க முயன்றால் 6 மாதம் சிறை
மூடி இருக்கும் ரயில்வே 'கேட்' கடக்க முயன்றால் 6 மாதம் சிறை
ADDED : ஜூலை 27, 2025 02:44 AM

சென்னை: 'மூடி இருக்கும் ரயில்வே கேட் பகுதிகளை, இரு சக்கர வாகனங்களில் கடக்க முயல்வோருக்கு, ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்' என, தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலுார் மாவட்டம், ஆலப்பாக்கம் கிராமத்தில், கடந்த 8ம் தேதி காலையில் பள்ளி வாகனம் மீது, விழுப்புரம் - மயிலாடுதுறை பயணியர் ரயில் மோதியதில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ரயில்வே கேட்களில் தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. கவனக்குறைவாக செயல்படும் 'கேட் கீப்பர்'கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், பாதுகாப்பு விதியை மீறும், வாகன ஒட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்க, ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வே பாதைகளை கடந்து செல்வது, பாதுகாப்பு விதிமீறல்.
குறிப்பாக, ரயில்வே 'கேட்' மூடியிருக்கும்போது, சிலர் சைக்கிள், பைக்கில் உள்ளே புகுந்து செல்ல முயற்சிக்கின்றனர்.
இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட கூடாது என தொடர்ந்து விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இப்படி விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு, இந்திய ரயில்வே சட்டம், 146 பிரிவுபடி, ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

