ADDED : ஜன 05, 2025 11:01 PM
சிக்கமகளூரு: நாட்டின் பல பகுதிகளில் நக்சல்கள், பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகாவிலும் மலை பிரதேச பகுதிகளில் போராடி வருகின்றனர்.
கடந்தாண்டு நவம்பரில் உடுப்பி மாவட்டம் ஹெப்ரியில், முக்கிய நக்சல்கள் இருப்பதாக நக்சல் ஒழிப்பு படைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற படையினர் மீது, அவர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதலில், நக்சல் கர்நாடகா பிரிவு தலைவர் விக்ரம் கவுடா கொல்லப்பட்டார். அவருடன் இருந்த நான்கைந்து நக்சல்கள் தப்பியோடி விட்டனர்.
இவர்களை கண்டுபிடிக்கும் பணியில் நக்சல் ஒழிப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போதே முதல்வர் சித்தராமையா, 'ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, சரணடையுங்கள். மற்றவர்கள் போன்று சமுதாயத்துடன் இணைந்து வாழ, அரசு நடவடிக்கை எடுக்கும்' என கூறியிருந்தார்.
இதையடுத்து, சரண் அடைவது தொடர்பாக நக்சல் சரணடையும் கமிட்டி, அமைதிக்கான சிட்டிசன் அமைப்புக்கு, நக்சல்கள் முண்டகரு லதா, சுந்தரி குல்லுார், வஜாக் ஷி பலேஹோல், மாரெப்பா அரோலி, வசந்தா, ஜீஷ் ஆகியோர் கடிதம் எழுதி உள்ளனர். முதல்வரும் நக்சல்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.