துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி உட்பட 6 பேர் கைது
துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி உட்பட 6 பேர் கைது
ADDED : அக் 05, 2024 10:57 PM
சுத்தகுன்டேபாளையா: சுத்தகுன்டேபாளையா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பிளைவுட் கடை நடத்தி வருபவர் இலியாஸ். செப்., 20ம் தேதி இவரின் கடைக்கு வந்த அப்பகுதி ரவுடி சிராஜுதின், இலியாசிடம் பணம் கேட்டுள்ளார்.
பணம் தர மறுத்த இலியாஸ் மார்பில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். இதை அக்கம், பக்கத்தில் இருந்த கடைக்காரர்கள் பார்த்து கடைக்குள் வந்தனர்.
இதை பார்த்த சிராஜுதின், “என் அருகில் யாரும் வரக்கூடாது; வந்தால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன்,” என்று கூறி, வானத்தை நோக்கி சுட்டு மிரட்டினார்.
பின், தன்னுடன் வந்த முகமது குராம் பாஷாவுடன் இரு சக்கர வாகனத்தில் தப்பித்தார். அங்கிருந்த கடை உரிமையாளர்கள், முகமது குராம் பாஷாவை பிடித்துக் கொண்டு, சுத்தகுன்டேபாளையா போலீசில் புகார் செய்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், முகமது குராமிடம் விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி, இத்தனை நாட்கள் தலைமறைவாக இருந்த சிராஜுதின் உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.