ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி
ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி
ADDED : அக் 23, 2024 01:11 AM

புலந்த்சாஹர்,உத்தர பிரதேசத்தில், வீட்டில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உ.பி.,யின் புலந்த்சாஹர் மாவட்டத்தில் உள்ள சிகந்ராபாத் பகுதியில் உள்ள ஆசாபுரி காலனியில் உள்ள வீட்டில் ரியாசுதின், 50, என்பவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19 பேர் வசித்து வந்தனர்.
ரியாசுதின் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். வீட்டில் சிகிச்சையை தொடர்வதற்காக ஆக்சிஜன் சிலிண்டரை வைத்திருந்தனர். அந்த சிலிண்டர் நேற்று முன்தினம் இரவு திடீரென வெடித்து, பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதில், வீட்டின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து சேதமடைந்தது.
இந்த விபத்தில் ரியாசுதின், அவரது மனைவி ருக்சனா, 45, உட்பட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் உள்ளிட்டோர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பலியானார்.
இதனால் பலி எண்ணிக்கை, ஆறு ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த மூவர் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்.

