ADDED : டிச 06, 2024 06:34 AM
பெங்களூரு: குற்றவாளிகளுக்கு துணை போன, ராமமூர்த்தி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு போலீசாரை, 'சஸ்பெண்ட்' செய்து, நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா உத்தரவிட்டார்.
பெங்களூரு ராமமூர்த்தி நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துராஜ், எஸ்.ஐ., உமேஷ், உதவி எஸ்.ஐ.,க்கள் மகேஷ், பெரோஸ் கான், தலைமை ஏட்டுகள் மகேஷ், பசவராஜ் ஆகியோர் கொலை குற்றவாளியை கைது செய்யாமல் விடுவித்தது; போலீசாரை தாக்கியவரிடம் பணம் வாங்கிக் கொண்டு வழக்கு பதிவு செய்யாதது; போதைப்பொருள் விற்பனை செய்வோரிடம் பணம் பெற்றது உட்பட பல்வேறு புகார்கள் குறித்து நகர போலீஸ் கமிஷனர் தயானந்தாவுக்கு தகவல் சென்றது.
இது தொடர்பாக உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை குழுவை அமைத்தார். அவர்கள், குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்று அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆறு பேரையும் சஸ்பெண்ட் செய்து, விசாரணை நடத்தும்படிஉத்தரவிட்டுள்ளார்.