சஸ்பெண்டால் கோபம்! சட்டசபையில் போர்வை, தலையணைகளுடன் இரவை கழித்த காங். எம்.எல்.ஏ.க்கள்
சஸ்பெண்டால் கோபம்! சட்டசபையில் போர்வை, தலையணைகளுடன் இரவை கழித்த காங். எம்.எல்.ஏ.க்கள்
ADDED : பிப் 22, 2025 08:49 AM

ஜெய்பூர்; ராஜஸ்தானில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 காங். எம்.எல்.ஏக்கள் போர்வைகள், மெத்தைகள் கொண்டு வந்து சட்டசபையில் இரவை கழித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய கேள்வி நேரத்தின் போது, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் அவனாஷ் கெஹ்லோட், மாஜி பிரதமர் இந்திரா குறித்து சர்ச்சையாக பேசியதாக தெரிகிறது.
அவரின் இந்த பேச்சை கண்டித்து காங். எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய கருத்தை திரும்ப பெற்று, அவையில் மன்னிப்பு கேட்க கோரி அவர்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
அவர்களின் நடவடிக்கைகள் அவைக்கு குந்தகம் விளைவிப்பதாக இருந்ததால், சபாநாயகர் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ.க்களை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
சபாநாயகரின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர்கள், நூதனமான முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். சட்டசபையில் இரவு தங்கி ஆட்சேபத்தை தெரிவிக்க எண்ணினர்.
அதன்படி, 6 பேரும் மெத்தைகள், போர்வைகள், தலையணைகள் ஆகியவற்றுடன் சட்டசபையில் நேற்றிரவு நுழைந்து அங்கேயே தூங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டசபையில் இரவை கழிக்க உரிய ஏற்பாடுகளுடன் அவர்கள் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.