யாருக்கு 6 தொகுதி: மகாராஷ்டிராவில் காங்., உத்தவ் சேனா குஸ்தி
யாருக்கு 6 தொகுதி: மகாராஷ்டிராவில் காங்., உத்தவ் சேனா குஸ்தி
ADDED : செப் 19, 2024 05:28 PM

மும்பை: மும்பையில் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் 6 தொகுதிகளை பங்கு பிரிப்பதில் காங்கிரஸ் மற்றும் உத்தவ் சேனா இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து மூலம் மகா விகாஸ் அகாடி (MVA) கூட்டணி கூட்டம் இன்று நடைபெற்றது.
மூன்று மணி நேரம் நீடித்த கூட்டத்தில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) சார்பில் சஞ்சய் ராவத், அனில் தேசாய், என்சிபி (சரத் பவார் பிரிவு) சார்பில் ஜிதேந்திர அவாத், ஜெயந்த் பாட்டீல் மற்றும் காங்கிரஸிலிருந்து நானா பட்டோல், அதுல் லோண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மும்பையில் உள்ள 36 சட்டமன்ற தொகுதிகளில் 20 இடங்களுக்கு சேனா (யுபிடி) உரிமை கோரியது. காங்கிரஸ் 18 இடங்களையும், என்சிபி (எஸ்பி) ஏழு இடங்களிலும் கேட்கின்றனர்.
சிறுபான்மையினர், ஆதிக்கம் செலுத்தும் 6 தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் உத்தவ் சிவசேனா (யுபிடி) ஆகிய இரு கட்சிகளுமே கேட்கின்றனர்.
மும்பையில், சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பைகுல்லா, குர்லா, காட்கோபார் மேற்கு, வெர்சோவா, ஜோகேஸ்வரி கிழக்கு, மாஹிம் ஆகிய 6 தொகுதிகளை , காங்கிரசிடமிருந்து மீட்க, உத்தவ் சேனா காய் நகர்த்தி வருகிறது.
சரத்பவார் அணியும், குர்லா, காட்கோபார், வெர்சோவா ஆகிய தொகுதிகளை கேட்டு வருகிறது.
சமீபத்திய லோக்சபா தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, அதிக இடங்களை கைப்பற்றும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில், 13 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. சேனா (யுபிடி) மற்றும் சரத்பவார் அணி தலா ஒன்பது மற்றும் எட்டு இடங்களைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சரத்பவார் அணியின் ஜிதேந்திர அவாத் கூறுகையில், கூட்டணி பிரச்சினையை தீர்த்து, ஒற்றுமையாக தேர்தலில் போட்டியிடுவோம். “காங்கிரஸுக்கும் உத்தவ் சேனாவுக்கும் (யுபிடி) எந்த வித்தியாசமும் இல்லை, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.