ADDED : நவ 06, 2025 06:51 AM

மிர்சாபூர்: உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில், தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதிய வி பத்தில் இரு சிறுமியர் உட்பட ஆறு பெண்கள் பலியாகினர்.
உத்தர பிரதேசத்தில் உள்ள சோபன் நகரில் இருந்து பிரயாக்ராஜுக்கு, சோபன் - பிரயாக் ராஜ் எக்ஸ்பிரஸ் சென்று நேற்று காலை கொண்டிருந்தது. வழியில், மிர்சாபூரில் உள்ள சூனார் ஜங்ஷனில் பயணியர் இறங்கினர்.
அவர்களில் சிலர் பிளாட்பாரத்தில் இறங்காமல் தண்டவாளத்தில் இறங்கி, எதிரே உள்ள பிளாட்பாரத்துக்கு வேகமாக சென்றனர். அப்போது அந்த தண்டவாளத்தில் அதிவேகமாக வந்த ஹவுரா - கல்கா நேதாஜி எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் இரு சிறுமியர், நான்கு பெண்கள் என ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரயில் வருவதை அறிந்த ஆண்கள் வேகமாக ஓடி பிளாட்பாரத்தில் ஏறி உயிர் தப்பினர். பெண்கள் பிளாட்பாரத்தில் ஏற முடியாததால் விபத்தில் சிக்கினர். இதனால், தண்டவாளத்தில் ரத்தமும் சதையுமாக உடல்பாகங்கள் சிதறிக்கிடந்தன. உயிரிழந்தவர்கள் சவீதா, 28, சாதனா, 16, சிவகுமாரி, 12, அஞ்சு தேவி, 20, சுசிலா தேவி, 60, கலாவதி, 50, என அடையாளம் காணப் பட்டுள்ளது' என்றனர். உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக தலா, 2 லட்சம் ரூபாய் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

