60 கி.மீ. ‛‛சேஸிங்'' மோசடி மன்னனை அலேக்காக தூக்கிய போலீஸ்
60 கி.மீ. ‛‛சேஸிங்'' மோசடி மன்னனை அலேக்காக தூக்கிய போலீஸ்
ADDED : ஆக 04, 2024 10:56 PM

புதுடில்லி: ஜாமினில் வெளிவர முடியாத நான்கு கைது வாரண்ட்டில் தேடப்பட்டு வந்த பிரபல ரியல் எஸ்டேட் மோசடி மன்னன் சஞ்சீவ் ஜெயினை டில்லி போலீசார் சினிமா பாணியில் 60 கி.மீ. துரத்தி சென்று கைது செய்தனர்.
அரியானா மாநிலம் குர்கானை சேர்ந்தவர் சஞ்சீவ் ஜெயின் இவர் பார்சவ்நாத் டெவலப்பர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் துவங்கி 13 மாநிலங்களில் 37 நகரங்களில் கிளைகளை அமைத்து அதன் சி.ஐ.ஓ.வாக இருந்தார். இதில் ரூ. பல கோடி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
தேசிய நுகர்வேர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். தொடர்ந்து அவருக்கு எதிராக 4 கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவானார்.
சாஹத்ரா போலீஸ் நிலைய சிறப்பு தனிப்படை போலீசார் வழக்குப்பதிந்து அரியானாவில் குர்கானில் அவரது இல்லத்திற்கு தேடி சென்றனர்.
அப்போது வெளிநாடு தப்பியோட திட்டமிட்டு டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நோக்கி காரில் தப்பிசெல்ல முயன்றார் . அவரை சிறப்பு தனிப்படை போலீசார் சினிமா பாணியில் 60 கி.மீ. துரத்தி சென்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது. நாளை (ஆக.05) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.