வாரணாசியில் ரூ.6,100 கோடி திட்டப்பணி; தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
வாரணாசியில் ரூ.6,100 கோடி திட்டப்பணி; தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
UPDATED : அக் 20, 2024 07:19 PM
ADDED : அக் 20, 2024 06:57 PM

வாரணாசி: உத்தரபிரதேசம் வாரணாசியில் ரூ.6,100 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தில் ரூ.2,870 கோடி மதிப்பில் கட்டப்பட இருக்கும் விமான ஓடுதளம், ஆண்டுக்கு 2.3 கோடி பயணியர் வந்து செல்லும் வகையிலான புதிய விமான நிலைய முனையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, ஆர்.ஜே., சங்கரா கண் மருத்துவமனையை திறந்து வைத்தார். தொடர்ந்து, கவர்னர் ஆனந்திபென் படேல் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், காஞ்சி சங்கராச்சார்யார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைசந்தித்து ஆசிபெற்றார்.
அதேபோல, ரூ.210 கோடி மதிப்பில் விளையாட்டு அறிவியல் மையம் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கான திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், சுற்றுலாத் துறை மேம்படுத்துவதற்கு தேவையான திட்டங்களையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். இந்தப் பயணத்தின் போது சுமார் ரூ.6,100 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக இரு இலக்குகளை தீர்மானித்து, உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான் இரு இலக்குகளாகும். சுற்றுலா மற்றும் தொழில் ரீதியாக பனாரஸூக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்மூலம், நீங்கள் பயனடைய முடியும். பபத்பூர் விமானநிலையம் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகும், நீங்கள் மேலும் பலனடைய முடியும்.
நான் செங்கோட்டையில் இருந்து அழைப்பு விடுத்துள்ளேன். அரசியல் தொடர்பே இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வருவேன். இது இந்திய அரசியலின் திசையையே மாற்றும். அதுமட்டுமில்லாமல், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும், எனக் கூறினார்.