போதைப் பொருட்கள் விற்கப்படும் 64 'ஹாட்ஸ்பாட்'கள் அடையாளம் 'ஆப்பரேஷன் கவாச்'
போதைப் பொருட்கள் விற்கப்படும் 64 'ஹாட்ஸ்பாட்'கள் அடையாளம் 'ஆப்பரேஷன் கவாச்'
ADDED : நவ 14, 2024 09:32 PM
புதுடில்லி:தேசிய தலைநகர் டில்லியில் 12 முதல் 13ம் தேதி வரை 24 மணி நேரம் நடத்திய 'ஆப்பரேஷன் கவாச்' என்ற சோதனையின்போது, 907 இடங்களில் சோதனை நடத்தி, போதைப் பொருட்கள் விற்கப்படும் 64 'ஹாட்ஸ்பாட்'கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தேசிய தலைநகரில் போதைப்பொருள் கடத்தல், விற்பனைக்கு எதிராக டில்லி காவல்துறை, 2023 மார்ச் மாதம் 'ஆப்பரேஷன் கவாச்' என்ற தேடுதல் வேட்டையை துவக்கி, அவ்வப்போது நடத்தி வருகிறது.
காவல் துறையின் குற்றப்பிரிவு, சிறப்பு பிரிவு உட்பட டில்லி காவல்துறையின் 15 மாவட்ட அனைத்து பிரிவுகளும் 12ம் தேதி முதல் 13 வரை 24 மணி நேர 'ஆப்பரேஷன் கவாச்' என்ற தேடுதல் நடவடிக்கையை துவக்கின.
இதுதொடர்பாக நேற்று குற்றப்பிரிவு சிறப்பு காவல் ஆணையர் தேவேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:
தேசிய தலைநகர் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர். சந்தேகத்திற்கு இடமான அனைத்து பகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக போலீசார் களமிறங்கினர்.
மொத்தம் 907 இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 1,224 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. இவர்களில் 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, தேசிய தலைநகரில் போதைப் பொருட்கள் விற்கப்படும் 64 'ஹாட்ஸ்பாட்'கள் அடையாளம் காணப்பட்டன. இந்த ஹாட்ஸ்பாட்கள் இனி 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும்.
நேற்று முன்தினம் நடந்த சோதனையின்போது, 870.1 கிராம் ஹெராயின், 244.8 கிலோகிராம் கஞ்சா, 16.1 கிராம் கொக்கையின், 434 கிராம் எம்.டி.எம்.ஏ., போதைப்பொருள், 34,420 ரொக்கம், 20 கிராம் தங்கச் சங்கிலி, ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு ஸ்கூட்டர், ஒரு டெம்போ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 6 நாட்டு கைத்துப்பாக்கிகள், 9 தோட்டாக்கள், 8 கத்திகள், திருடப்பட்ட 15 மோட்டார் சைக்கிள்கள் என 14 ஆயுதச் சட்ட வழக்குகளில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.