ஜார்க்கண்டில் 64.8%; வயநாட்டில் 60.7% ஓட்டுப்பதிவு;தேர்தல் கமிஷனின் அடுத்த 'அப்டேட்'
ஜார்க்கண்டில் 64.8%; வயநாட்டில் 60.7% ஓட்டுப்பதிவு;தேர்தல் கமிஷனின் அடுத்த 'அப்டேட்'
UPDATED : நவ 13, 2024 06:08 PM
ADDED : நவ 13, 2024 10:22 AM

புதுடில்லி: ஜார்க்கண்ட் முதல்கட்ட சட்டசபை தேர்தலில், மாலை 5 மணி நிலவரப்படி 64.85% ஓட்டுப்பதிவாகி உள்ளது. வயநாடு இடைத்தேர்தலில் 60.70 % ஓட்டுப்பதிவாகி உள்ளது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்டில், 43 சட்ட சபை தொகுதிகளில் இன்று (நவ.,13) முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இங்கு, முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
இன்று, 43 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள 38 தொகுதிகளில், வரும் 20ல் தேர்தல் நடக்கிறது; 23ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்த தேர்தலில், ஆளும் கூட்டணிக்கும், பா.ஜ., கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தலில், செரைகெல்லா, ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் மேற்கு, ஜெகநாத்பூர், ஜாம்ஷெட்பூர் கிழக்கு ஆகியவை முக்கிய தொகுதிகள். காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி நடந்து வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி 64.85% ஓட்டுப்பதிவாகி உள்ளது
வயநாடு இடைத்தேர்தல்
கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதியிலும் இன்று (நவ.,13) இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், காங்கிரஸ் சார்பில், அந்த கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இடது சாரி கூட்டணி சார்பில் சத்யன் மொகேரியும், பா.ஜ., சார்பில் நவ்யாவும் போட்டியிடுகின்றனர். மாலை, 5 மணி நிலவரப்படி, 60.70 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது
நம்பிக்கை இருக்கு!
'மக்கள் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும். வயநாடு தொகுதியில் பணியாற்ற மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்' என கல்பெட்டாவில் ஓட்டுப்பதிவைப் பார்வையிட்ட பின் பிரியங்கா பேட்டி அளித்தார்.