என்ன காரியம் பண்ணுன... 65 கிலோ பட்டாசுகள் பறிமுதல்; டில்லியில் இளைஞர் கைது
என்ன காரியம் பண்ணுன... 65 கிலோ பட்டாசுகள் பறிமுதல்; டில்லியில் இளைஞர் கைது
ADDED : செப் 22, 2024 06:05 PM

புதுடில்லி: தலைநகர் டில்லியில் சட்டவிரோதமாக 65 கிலோ பட்டாசுகளை எடுத்துச் சென்ற 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மாசுபாடு
டில்லியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. தீபாவளிக்கு பட்டாசுகளை வெடித்தது, ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள், விவசாயக் கழிவுகளை எரித்தது மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் உமிழ்வு புகையினாலும் இந்த மாசுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
எனவே, காற்று மாசுபடுவதை தடுக்க டில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, வாகன கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதாவது, ஒற்றை இலக்க எண் கொண்ட வாகனங்கள் குறிப்பிட்ட கிழமைகளிலும், இரட்டை இலக்க எண் கொண்ட வாகனங்கள் மற்ற நாட்களிலும் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டு வந்தது. மேலும், பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
கைது
இந்த நிலையில், தலைநகர் டில்லியில் சட்டவிரோதமாக 65 கிலோ பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நேற்றிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சண்டே பசாரை நோக்கிச் சென்ற காரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, 4 பைகளில் 65 கிலோ எடையுள்ள பட்டாசுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, காரில் இருந்த ரோகித்,21, என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், 2 பேர் தப்பியோடினர்.
ஆளுங்கட்சிக்கே
அண்மையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்த டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலை பட்டாசு வெடித்து வரவேற்ற ஆம்ஆத்மி கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.