sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழக வாக்காளர்கள் பட்டியலில் 6.5 லட்சம் பீஹாரிகள்: சேர்ப்பது சரியா என காங்கிரஸ் கேள்வி; பொய்யான புகார் என நிராகரித்தது தேர்தல் கமிஷன்

/

தமிழக வாக்காளர்கள் பட்டியலில் 6.5 லட்சம் பீஹாரிகள்: சேர்ப்பது சரியா என காங்கிரஸ் கேள்வி; பொய்யான புகார் என நிராகரித்தது தேர்தல் கமிஷன்

தமிழக வாக்காளர்கள் பட்டியலில் 6.5 லட்சம் பீஹாரிகள்: சேர்ப்பது சரியா என காங்கிரஸ் கேள்வி; பொய்யான புகார் என நிராகரித்தது தேர்தல் கமிஷன்

தமிழக வாக்காளர்கள் பட்டியலில் 6.5 லட்சம் பீஹாரிகள்: சேர்ப்பது சரியா என காங்கிரஸ் கேள்வி; பொய்யான புகார் என நிராகரித்தது தேர்தல் கமிஷன்

16


UPDATED : ஆக 04, 2025 01:58 PM

ADDED : ஆக 04, 2025 12:05 AM

Google News

16

UPDATED : ஆக 04, 2025 01:58 PM ADDED : ஆக 04, 2025 12:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பீஹாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியால், 65 லட்சம் பேர் ஓட்டுரிமையை இழக்கும் அபாயத்தில் இருக்கும்போது, தமிழகத்தில் 6.5 லட்சம் பீஹாரிகள் வாக்காளர்களாக சேர்க்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் ஆபத்தானது மற்றும் சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

இங்கு, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

நீக்கப்பட்டுள்ளன

கடந்த 2003ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நடந்த சிறப்பு தீவிர திருத்தப் பணியால், 65 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மரணம், நிரந்தரமாக இடம் பெயர்ந்தது, பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது போன்ற காரணங்களால் இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பீஹாரில் இருந்து பல மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்துள்ள 36 லட்சம் பேரும் இதில் அடங்குவர்.

இவ்வாறு புலம் பெயர்ந்தோர், அவர்கள் குடியேறியுள்ள மாநிலங்களிலேயே, வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போது புலம்பெயர்ந்த 36 லட்சம் பேரில், ஏழு லட்சம் பேர் தமிழகத்தில் குடியேறியுள்ளனர். அவர்களில், 6.5 லட்சம் பேர் விரைவில் தமிழகத்தில் ஓட்டுரிமை கோரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பீஹாரில் இருந்து வேலைக்காக தமிழகம் வந்த புலம்பெயர் தொழிலாளர்களை எப்படி தமிழக வாக்காளர்களாக மாற்றலாம் என, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று கூறியுள்ளதாவது

பீஹாரில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுரிமையை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அவர்களில், 6.5 லட்சம் பேரை தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்கப் போவதாக வெளியாகும் தகவல், எச்சரிக்கை மணி அடிப்பது போல இருக்கிறது; இது மிகவும் ஆபத்தானது.

புலம்பெயர் தொழிலாளர்களை நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என அழைப்பது, அவர்களை அவமதிக்கும் செயலாகும். தவிர, விருப்பமான அரசை தேர்ந்தெடுக்கும் தமிழக வாக்காளர்களின் உரிமையில் தலையிடுவது போன்றது.

வழக்கம்போல மாநில சட்டசபை தேர்தலின்போது, புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலமான பீஹார் அல்லது வேறு மாநிலத்திற்கு செல்ல மாட்டார்களா? சாத் பூஜை பண்டிகையின்போதெல்லாம் புலம்பெயர் தொழிலாளர்கள் பீஹாருக்கு செல்வதில்லையா?

வாக்காளராக பதிவு செய்ய வேண்டுமெனில், அவருக்கு நிரந்தரமான வீட்டு விலாசம் அவசியம். பீஹாரில் புலம்பெயர் தொழிலாளருக்கு அப்படி நிரந்தரமான விலாசம் இருக்கிறது

அப்படி இருக்கும்போது, பீஹாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எப்படி தமிழகத்தின் வாக்காளராக முடியும்? பீஹாரில் ஒரு புலம்பெயர் தொழிலாளியின் குடும்பத்திற்கு நிரந்தர வீடு இருக்கும் பட்சத்தில், அவர் தமிழகத்திற்கு நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர் என எப்படி கருத முடியும்?

துஷ்பிரயோகம்

தேர்தல் கமிஷன் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. தேசத்தின் ஒட்டுமொத்த தேர்தல் முறைகளையும், தேர்தல் குணத்தையும் மாற்ற முயற்சிக்கிறது. தேர்தல் கமிஷனின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நிச்சயம் போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தேர்தல் கமிஷன் மறுப்பு

இதற்கிடையே, சிதம்பரம் தவறான தகவலை தருவதாக அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது.'தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி இன்னும் துவங்கப்படாத நிலையில், எப்படி 6.5 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்படுவர்? பீஹாரில் நடந்த வாக்காளர் திருத்தப் பணியை தமிழகத்துடன் ஒப்பிடுவது தவறானது. இத்தகைய அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுவதை அவர் தவிர்க்க வேண்டும்' என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் நடத்த வேண்டும்

பீஹார் மாநிலத்தில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து, 65 லட்சம் பேரை நீக்கியுள்ளனர். இது, தமிழகத்திற்கான நடவடிக்கையாகவும் மாறும். தமிழகத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த, 70 லட்சம் பேர் தொழிலாளியாகவும், வியாபாரிகளாகவும் குடியேறி உள்ளனர். அவர்களை தமிழக வாக்காளர்களாக சேர்க்கும் செயல் திட்டமும் உள்ளது. இது குறித்து விரிவான விவாதம் நடந்த, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். - திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்







      Dinamalar
      Follow us