பீஹாரில் கடைசி கட்ட தேர்தல் 67 சதவீத ஓட்டுகள் பதிவு
பீஹாரில் கடைசி கட்ட தேர்தல் 67 சதவீத ஓட்டுகள் பதிவு
ADDED : நவ 12, 2025 06:01 AM

பாட்னா: பீஹாரில், 122 தொகுதிகளில் நேற்று நடந்த இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தலில், 67.14 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., - எதிர்க்கட்சியான காங்., கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
கடந்த, 6ல், 121 தொகுதிகளில் நடந்த முதற்கட்ட தேர்தலில், 65 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், மீதமுள்ள, 122 தொகுதிகளில், நேற்று இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடந்தது. காலை, 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை, 6:00 மணி வரை நடந்தது.
ஒருசில ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு முடியும் நேரத்துக்கு முன்னரே நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்றதால், 6:00 மணியை தாண்டியும் ஓட்டுப்பதிவு நடந்தது.
மாலை, 5:00 மணி நிலவரப்படி, 122 தொகுதிகளில், 67.14 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக, கிஷன்கஞ்ச் தொகுதியில் 76.26; குறைந்தபட்சமாக, நவாடா தொகுதியில், 57 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த தொகுதிகளில், கடைசியாக, 1998ல், 64.6 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், அதை முறியடிக்கும் வகையில், 67 சதவீத ஓட்டுகள் தற்போது பதிவாகி உள்ளன.
இரு கட்டங்களின் சராசரி ஓட்டுப்பதிவு, 65 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 2020 சட்டசபை தேர்தலில், ஒட்டுமொத்தமாக, 57 சதவீத ஓட்டுகளே பதிவாகின. இரு கட்டங்களில் பதிவான ஓட்டுகள், நாளை மறுதினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

