அமெரிக்காவில் இருந்து 682 இந்தியர்கள் நாடு கடத்தல்: மத்திய அரசு தகவல்
அமெரிக்காவில் இருந்து 682 இந்தியர்கள் நாடு கடத்தல்: மத்திய அரசு தகவல்
ADDED : ஏப் 04, 2025 10:30 PM

புதுடில்லி: கடந்த ஜன., மாதம் முதல், அமெரிக்காவில் இருந்து 682 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு உள்ளனர் எனவும், அதில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக லோக்சபாவில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் கூறியதாவது; அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், விசா காலம் முடிந்தும் தங்கி உள்ளவர்கள், எந்த ஆவணமும் இல்லாமல் அங்கு வசிப்பவர்கள் அல்லது குற்றவியல் தண்டனைக்கு உள்ளானவர்கள் என கண்டறியப்பட்ட நபர்களை நாடு கடத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் இந்திய அரசு அமெரிக்கா அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியர்களின் பட்டியலை, இந்திய விசாரணை அமைப்புகள் நன்கு ஆய்வு செய்து சரிபார்க்கப்பட்டு உள்ளது. இந்திய நாட்டினர் என சரிபார்க்கப்பட்ட நபர்கள் மட்டுமே நாடு கடத்தப்பட்டால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறித்த சரியான தகவல்கள் ஏதும் அரசிடம் இல்லை. இருப்பினும், அங்கிருந்து நாடு கடத்தப்படுபவர்கள் அளிக்கும் தகவல்களை வைத்து சட்டவிரோதமாக குடியேற்றத்திற்கு உதவுபவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடும் கும்பல் மீது மத்திய அரசு வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
இந்தாண்டு ஜன., முதல் 682 இந்தியர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.