எடை தாங்காமல் சரிந்த மேடை உ.பி.,யில் 7 பேர் உயிரிழப்பு
எடை தாங்காமல் சரிந்த மேடை உ.பி.,யில் 7 பேர் உயிரிழப்பு
ADDED : ஜன 29, 2025 01:35 AM

பாக்பட், உத்தர பிரதேசத்தில், மத நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மூங்கில் மேடை, எடை தாங்காமல் சரிந்து விழுந்ததில், ஏழு பேர் உயிரிழந்தனர்.
உ.பி.,யின் பாக்பட் மாவட்டத்தின் பராவுட் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீ திகம்பர் ஜெயின் டிகிரி கல்லுாரி மைதானத்தில், அப்பகுதியைச் சேர்ந்த ஜெயின் சமூகத்தினர், 'லட்டு மஹோத்ஸவம்' என்ற நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்காக கல்லுாரி மைதானத்தில், மர படிக்கட்டுகளுடன், மூங்கில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, ஒரே நேரத்தில் மேடையில் ஏராளமானோர் ஏறி நின்றதால், எடை தாங்காமல், மூங்கில் மேடை சரிந்து விழுந்தது.
இதனால் அலறிய பக்தர்கள், முண்டியத்து தப்பிக்க முயன்றனர். இந்த விபத்தில் மேடை இடிபாடுகளில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்.
மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தகவலறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்தோரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சி கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வருவதாகவும், இந்த முறையும் போலீசார் அனுமதியுடனே நடந்ததாகவும், ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் மேடையில் நின்றதால் விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.