ADDED : அக் 31, 2024 01:52 AM

போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள பந்தவ்கார் புலிகள் சரணாலயத்தில் ஏழு யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் உள்ள பந்தவ்கார் பகுதியில் புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரண்டு யானைகள் மர்மமாக இறந்து கிடந்தன. வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். தொடர்ந்து மேலும் ஐந்து யானைகள் இறந்து கிடந்தன. இது தவிர உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
யானைகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை. இதையடுத்து, இறந்த யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டு ஜபல்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகள் கிடைத்த பிறகே யானைகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.
இந்நிலையில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட பயிர்களை மேய்ந்ததே யானைகள் பலியாக காரணம் என கூறப்படுகிறது. யானைகள் இறப்பு தொடர்பாக மாநில அரசு விசாரித்து வரும் நிலையில், டில்லியைச் சேர்ந்த வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு ஆணையம் தனியாக குழு அமைத்து யானைகள் இறப்பு குறித்து விசாரிக்கிறது. முன்னதாக கடந்த ஆகஸ்டில் இந்த சரணாலயத்தில் புலிகள் மர்மமாக இறந்த நிலையில் தற்போது யானைகள் இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.