ஒடிசா கல்லூரி விடுதியில் சர்ச்சை; மாணவர்கள் 7 பேர் ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றம்
ஒடிசா கல்லூரி விடுதியில் சர்ச்சை; மாணவர்கள் 7 பேர் ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றம்
ADDED : செப் 16, 2024 03:09 PM

புவனேஸ்வர்; ஒடிசா மாநிலத்தில் மாட்டிறைச்சி சமைத்ததாக கூறி கல்லூரி மாணவர்கள் 7 பேர் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
பெர்ஹாம்பூர் அரசு என்ஜினியரிங் கல்லூரி விடுதியில் மாணவர்கள் சிலர் மாட்டிறைச்சி சமைத்ததாக அதே விடுதியில் இருந்த வேறு ஒரு பிரிவு மாணவர்கள் புகார் அளித்திருந்தனர். கல்லூரி நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து கல்லூரி மாணவர் நல தலைவர் சில நாட்களுக்கு முன் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
அந்த அறிவிப்பில் விடுதியில் தங்கியிருந்த 7 மாணவர்களை வெளியேற்றுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காக என்று மேற்கோள் காட்டப்படவில்லை. மாறாக விடுதியில் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்பது மட்டும் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. மேலும் மாணவர்களில் ஒருவருக்கு ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரம் குறித்து அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி வளாகம்,விடுதி அருகே அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க போலீசார் கண்காணிப்பு பணியில் இறங்கி உள்ளனர்.