கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 7 பேர் பலி 6 வாரங்களில் 5வது சம்பவம்
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 7 பேர் பலி 6 வாரங்களில் 5வது சம்பவம்
ADDED : ஜூன் 16, 2025 01:02 AM

கேதார்நாத்: உத்தராகண்டின் கேதார்நாத்தில், தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், 2 வயது குழந்தை உட்பட ஏழு பேர் பலியாகினர்.
உத்தராகண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்வது வழக்கம்.
'சார்தாம்' யாத்திரை என அழைக்கப்படும் இந்த யாத்திரை துவங்கியதை அடுத்து, புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் கடந்த 3ம் தேதி திறக்கப்பட்டது.
கடினமான மலைப்பகுதி என்பதால், ஒரு சிலர் ஹெலிகாப்டர் வாயிலாக இந்த யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன.
அவ்வாறு பக்தர்களை ஏற்றிச் சென்ற 'ஆரியன் ஏவியேஷன்' என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, கேதார்நாத்தில் இருந்து குப்தகாசிக்கு நேற்று அதிகாலை 5:10 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட 10 நிமிடங்களில், அந்த விமானம் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இதில், விமானி, ஐந்து பெரியவர்கள் மற்றும் 2 வயது குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள், உத்தராகண்ட், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேதார்நாத் கோவிலில் வழிபட்டு திரும்பிய போது ஹெலிகாப்டரில் சென்றவர்கள் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்தை தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு ஹெலிகாப்டர் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆறு வாரங்களில் நடந்த ஐந்தாவது விபத்து இதுவாகும். இந்த விபத்துகளில், 12 பேர் பலியாகினர்.