தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி வாயிலாக பணம் பறித்த 7 பேர் கைது!

'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி வாயிலாக பணம் பறித்த 7 பேர் கைது!

'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி வாயிலாக பணம் பறித்த 7 பேர் கைது!


UPDATED : ஜன 11, 2026 12:13 PM

ADDED : ஜன 10, 2026 11:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2026 12:13 PM ADDED : ஜன 10, 2026 11:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி : நாடு முழுதும், 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி வாயிலாக, பல கோடி ரூபாய் அள்ளிய கும்பலை, டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர். அந்த கும்பலைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டதன் வாயிலாக, சீனா, தைவான், கம்போடியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர், இந்த மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.

'மொபைல் போன் வீடியோ' அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு, சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்பு அதிகாரிகளை போல பேசும் நபர்கள், சம்பந்தப்பட்ட நபரை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளதாக மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள், நாடு முழுதும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

'சிம்பாக்ஸ்


' டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என கூறப்படும் இதில் சிக்கி, நாட்டில் உள்ள தொழிலதிபர் முதல், சாமானிய மக்கள் வரை பல தரப்பினர் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். சமீப காலமாக பஹல்காம் தாக்குதல், டில்லி கார் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத சம்பவங்களை தொடர்பு படுத்தி, மக்களிடம் பணம் பறித்தது அதிகரித்ததை அடுத்து, இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் குவிந்தன.

டில்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு புகார்கள் வந்ததை அடுத்து, டில்லி உளவுத்துறை போலீசார் கடந்த அக்டோபரில் விசாரணையை துவக்கினர். இதில், 'சிம்பாக்ஸ்' எனப்படும் பல 'சிம் கார்டு'களை பயன்படுத்தும் சாதனத்தின் வாயிலாக, இந்த மோசடி அரங்கேறியது வெளிச்சத்துக்கு வந்தது.

தைவான் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சிம்பாக்ஸ் சாதனத்தின் வாயிலாக. பல போலியான மொபைல் போன் எண்களை கொண்டு மோசடி நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் அழைப்புகள், சிம்பாக்ஸ் உதவியால் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது.

இதனால், ஒரே மொபைல் போன் எண், பல்வேறு நகரங்களில் இருந்து ஒரே நேரத்தில் பயன்படுத்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, விசாரணையில் குழப்பத்தை உருவாக்கியது. இதையடுத்து, போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், டில்லியில் உள்ள கோய்லா டைரி பகுதியில் சிம்பாக்ஸ் சாதனம் செயல்பட்டது முதலில் கண்டு பிடிக்கப்பட்டது.

பறிமுதல்


இதை சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்த சஷி பிரசாத், 53, பர்வீந்தர் சிங், 38, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மஹாராஷ்டிராவின் மும்பை, பஞ்சாபின் மொஹாலி, தமிழகத்தின் கோவை ஆகிய பகுதிகளில் சிம்பாக்ஸ் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கைதானவர்கள் தந்த தகவலின்படி, தைவான் நாட்டைச் சேர்ந்த ஐசுங் சென், 30, என்பவர், அங்கிருந்து சிம்பாக்ஸ்களை சட்டவிரோதமாக கடத்தி வந்து, இங்கு விற்பனை செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.ஐசுங் சென் கடந்த மாதம் 21ல், தைவானில் இருந்து டில்லி வந்தார். அப்போது உளவுப்பிரிவு போலீசார், அவரை கைது செய்தனர்.

இது குறித்து, டில்லி உளவுப்பிரிவு மூத்த அதிகாரி கூறியதாவது: தைவானை தலைமையிடமாக வைத்து செயல்படும் சைபர் கிரைம் கும்பல் உதவியுடன் ஐசுங் சென் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ஈடுபட்டார்.இந்த கும்பலின் தலைவன் ஷாங்மின் வூ மற்றும் ஐசுங் சென் ஆகியோர் உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கம்போடியாவில் தங்கியிருந்து மோசடியில் ஈடுபட்ட போது, பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த விவகாரத்தில் உதவியதை ஐசுங் ஒப்புக்கொண்டார்.

பாதுகாப்பு சாதனங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை, பாக்., நபரிடம் இருந்து இருவரும் கற்றுக்கொண்டனர். அது மட்டுமின்றி, நேபாளத்தில் இருந்து செயல்படும் ஒரு வெளிநாட்டு குழுவால் இருவரும் இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில், இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 22 சிம்பாக்ஸ் சாதனங்கள், 20,000க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், லேப்டாப்கள், தொலைத்தொடர்பு கருவிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

விசாரணை


இந்த மோசடியில் சீனா, தைவான், கம்போடியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுஇருப்பதை அடுத்து, இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பல சர்வதேச நாடுகளுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதால், நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us