பெங்களூரில் ரூ.10 கோடி போதை 2 நைஜீரியர் உட்பட 7 பேர் கைது
பெங்களூரில் ரூ.10 கோடி போதை 2 நைஜீரியர் உட்பட 7 பேர் கைது
ADDED : செப் 30, 2025 03:52 AM

பெங்களூரு: பெங்களூரில், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இரண்டு நைஜீரியர்கள் உட்பட ஏழு பேரை கைது செய்தனர்.
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரு கே.ஜி.நகர் தபால் அலுவலகத்துக்கு, வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒரு பார்சல், சந்தேகத்திற்கிடமாக இருந்தது. இது குறித்து தபால் அலுவலக ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு சென்ற போலீசார், பார்சலை பிரித்து பார்த்த போது, 1.22 கிலோ உயர்ரக கஞ்சா இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு, 1 கோடி ரூபாய். இதை யார் அனுப்பியது என்பது விசாரணைக்கு பின் தெரியும்.
பெங்களூரின் ஹெப்ப கோடியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று காலை சோதனையிட்ட போலீசார், போதை மாத்திரைகள் உட்பட, 7.80 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். அங்கிருந்த, நைஜீரியாவை சேர்ந்த கெவின் ரோஜர், 38, தாமஸ் நவீத், 37, ஆகியோரை கைது செய்தோம்.
பெங்களூரின் பல பகுதிகளில் போதை பொருள் விற்ற மூவரை கைது செய்து, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தோம். அவர்கள் தந்த தகவலின்படி, பல் மருத்துவ கல்லுாரி மாணவர் ஒருவரை கைது செய்து, 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கேரளாவில் இருந்து, குறைந்த விலைக்கு உயர்ரக கஞ்சா வாங்கி வந்து, பெங்களூரில் விற்ற மென்பொறியாளர் ஒருவரை கைது செய்து, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கஞ்சா, ஒரு கார், பைக், மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களையும், ஏழு பேரையும் கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.