ADDED : ஜூலை 28, 2025 12:01 AM
ஹரித்வார்: உத்தராகண்டின் ஹரித்வார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மானசா தேவி கோவில் உள்ளது. விடுமுறை நாளையொட்டி, கோவிலுக்கு நேற்று அதிகளவில் பக்தர்கள் வந்தனர்.
சுவாமி தரிசனம் செய்ய கோவிலில் உள்ள படிக்கட்டுகளில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர்.
காலை 9:00 மணி அளவில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் அனைவரும் அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர்.
இதில் பலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். தகவலறிந்த போலீசார், மயக்கமடைந்த 35 பேரை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
இதில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக பக்தர்களிடையே பரவிய வதந்தியே நெரிசலுக்கு காரணம் என, தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய்; காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்க உத்தரவிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கூட்ட நெரிசல் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளார்.