தீபாவளி பண்டிகைக்காக நாடு முழுதும் 7 ஆயிரம் சிறப்பு ரயில்கள்: மத்திய அரசு ஏற்பாடு
தீபாவளி பண்டிகைக்காக நாடு முழுதும் 7 ஆயிரம் சிறப்பு ரயில்கள்: மத்திய அரசு ஏற்பாடு
UPDATED : அக் 24, 2024 06:09 PM
ADDED : அக் 24, 2024 05:57 PM

புதுடில்லி: தீபாவளி பண்டிகை மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு, நாடு முழுவதும் 7 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: பண்டிகை காலத்தில் தினமும் 2 லட்சம் பயணிகளை உதவுவதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி மற்றும் சாத் பூஜை காரணமாக மேற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மும்பை, சூரத், உத்னா, ஆமதாபாத், வதோதரா நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும்.
கடந்த ஆண்டு 4,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இச்சேவையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தாண்டு 7 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தீபாவளி பண்டிகை அக்.,31ல் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் சாத் பண்டிகை நவ.,5 ல் துவங்குகிறது.