ADDED : ஜன 08, 2024 11:46 PM

பெங்களூரு: கடந்த ஆண்டு வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம், கர்நாடகாவுக்கு கடத்தி வரப்பட்ட 702 கிலோ, போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பெண்கள் உட்பட 82 பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகா ரயில்வே எஸ்.பி., சவுமியலதா அளித்த பேட்டி:
ஆந்திராவின் விசாகப்பட்டினம், ஒடிசா, பீஹார், மேற்கு வங்கத்தில் இருந்து, கர்நாடகாவுக்கு ரயில் மூலம், போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகிறது. இதனை தடுக்க ரயில்வே போலீசார், தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
கடந்த ஆண்டு ரயில் மூலம், கர்நாடகாவுக்கு கடத்தப்பட்ட 702 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மதிப்பு 5.65 கோடி ஆகும். இதுதொடர்பாக பெண்கள் உட்பட 82 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2021ல் ரயில் மூலம் கடத்தப்பட்ட 94 கிலோ கஞ்சா பறிமுதல் ஆனது. 14 பேர் கைதாகினர். 2022ல் 303 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்து, 36 பேரை கைது செய்து இருந்தோம்.
கடந்த 2022 ல் பறிமுதல் செய்ததை விட 2023 ல் பறிமுதல் செய்யப்பட்ட, போதைப்பொருள் மதிப்பு 1,180 சதவீதம் அதிகம். ரயில்வே போலீசார் முன்பு நடைமேடைகளில் மட்டுமே, சோதனை நடத்தினர்.
இதனால் ரயிலில் போதைப் பொருள் கடத்துபவர்கள், கிராசிங்கில் ரயில் நிற்கும் போது அங்கு இறங்கி, பஸ்களில் பயணித்து, போதைப்பொருள் கடத்தினர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ரயில்களில், ரயில்வே போலீசார் சாதாரண உடையில் கண்காணித்தனர். சில வழக்குகளில் மோப்ப நாயும் உதவியது.
இவ்வாறு அவர்கூறினார்.