ADDED : நவ 01, 2025 10:00 PM
புதுடில்லி: டில்லி மாநகரப் போலீஸ், 'ஆப்பரேஷன் மிலாப்' திட்டத்தின் கீழ், தென்மேற்கு டில்லி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தில் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட 28 குழந்தைகள் உட்பட 75 பேரைக் கண்டுபிடித்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அக். 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை டில்லி மாநகரின் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட 28 குழந்தைகள் உட்பட 75 பேரை கண்டுபிடிக்க, ஆப்பரேஷன் மிலப் திட்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
மாயமான 75 பேர் போட்டோக்களும் பஸ் ஸ்டாண்ட்கள், ரயில் நிலையங்கள், ஆட்டோ மற்றும் மின்சார ரிக் ஷா ஸ்டாண்டுகளில் ஒட்டப்பட்டன.
போலீசார் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் மருத்துவமனைகளில் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. மாயமான 75 பேரும் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அக்., 31 வரை, காணாமல் போன 1,114 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதில் 366 குழந்தைகள் மற்றும் 748 பெரியவர்கள் அடங்குவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

