கெஜ்ரிவாலுக்கு 7வது சம்மன்: அமலாக்கத்துறை அடுத்தடுத்து நடவடிக்கை
கெஜ்ரிவாலுக்கு 7வது சம்மன்: அமலாக்கத்துறை அடுத்தடுத்து நடவடிக்கை
ADDED : பிப் 22, 2024 11:53 AM

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில், டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிப்.,26ம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
மதுபான கொள்கை வழக்கில், அமலாக்கத் துறையினர் அனுப்பிய சம்மன்களை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்து வருகிறார். இதை எதிர்த்து, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், அமலாக்கத் துறையினர் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த 17ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி, கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கெஜ்ரிவால், ''மார்ச் முதல் வாரம் வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கவிருப்பதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்'' என, கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிமன்றம், வழக்கை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதற்கிடையே மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், நேரில் விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு 6 முறை அனுப்பிய சம்மன்களை கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார்.
இந்நிலையில், டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிப்.,26ம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை 7வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. இதுவரை அனுப்பிய சம்மன்கள் சட்டவிரோதமானவை என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.