ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினருக்கு போலி ஆதார் அட்டைகள்: அச்சிட்டு கொடுத்த 8 பேர் கைது
ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினருக்கு போலி ஆதார் அட்டைகள்: அச்சிட்டு கொடுத்த 8 பேர் கைது
ADDED : ஆக 23, 2025 08:27 AM

லக்னோ: இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேற ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினருக்கு போலி ஆதார் அட்டைகளை தயாரித்த இரண்டு கும்பலை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினர் மற்றும் நேபாள மக்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு போலி ஆதார் அட்டைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர் என கூடுதல் காவல் துறை இயக்குநர் அமிதாப் யாஷ் தெரிவித்தார்.
ஒரு மிக பெரிய மோசடியை உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) முறியடித்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட கும்பல் மின்னணு முறைகளைப் பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரிக்கும் பணியை 9 மாநிலங்களில் தீவிரமாக செய்து வந்தது விசாரணையில் அம்பலம் ஆனது.
ரூ.2 ஆயிரம் டூ ரூ.40 ஆயிரம்
இது குறித்து கூடுதல் காவல் துறை இயக்குநர் அமிதாப் யாஷ் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சோதனை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட இரண்டு கும்பலை சேர்ந்த 8 பேர் பல்வேறு மோசடிகளை செய்துள்ளனர். ஒவ்வொரு போலி ஆதார் அட்டைக்கும், கும்பல் ரூ.2,000 முதல் ரூ.40,000 வரை வசூலித்தது.
இந்த ஆதார் அட்டைகள் பின்னர் பாஸ்போர்ட் மற்றும் பிற போலி இந்திய ஆவணங்களைப் பெறவும், அரசாங்கத் திட்டங்களைப் பெறவும் மக்களால் பயன்படுத்தப்பட்டன. இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அமிதாப் யாஷ் தெரிவித்தார்.