லாரி மீது வேன் மோதி விபத்து ஆந்திராவில் 8 பக்தர்கள் பலி
லாரி மீது வேன் மோதி விபத்து ஆந்திராவில் 8 பக்தர்கள் பலி
ADDED : ஏப் 17, 2026 01:44 AM

விஜயவாடா, ஆந்திராவில், பக்தர்கள் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதில் ஐந்து பெண்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர்.
கர்நாடகாவின் சிக்கமகளூருவை சேர்ந்த 20 பேர், ஆந்திராவின் கர்னுால் மாவட்டம் மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திர சுவாமி கோவிலுக்கு வேனில் நேற்று முன்தினம் சென்றனர். அப்போது, மந்த்ராலயம் அருகே சிலகலடோனா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில், ஐந்து பெண்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். வேன் டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததே விபத்திற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும்' என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
