ADDED : மார் 31, 2026 11:36 PM

பாட்னா: பீஹாரில் உள்ள சீத்ல மாதா கோவிலில், சிறப்பு பூஜையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, எட்டு பக்தர்கள் உயிரிழந்தனர்.
பீஹார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தின் மகரா கிராமத்தில், சீத்ல மாதா கோவில் உள்ளது. இங்கு, நேற்று சைத்ர மாதம் கடைசி செவ்வாய் கிழமையையொட்டி ஏராளமான பெண்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.
வரிசையில் நிற்காமல் தரிசனத்துக்காக முண்டியடித்து சென்றதால், கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பக்தர்கள் உயிரிழந்தனர்; 6க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது பற்றி அறிந்த போலீசார், கிராமத்தினர் உதவியுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு, பீஹார் ஷெரிப் நகரத்தில் உள்ள மாதிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி அறிந்த முதல்வர் நிதிஷ் குமார், நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் தலா 6 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் விபத்து பற்றி அறிந்த பிரதமர் மோடி, இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தோருக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
