ADDED : டிச 08, 2024 12:26 AM
மும்பை,:பருவநிலை மாற்றத்தை தாக்குப்பிடித்து, அதிக மகசூல் தரக்கூடிய, கோதுமை, நெல் உட்பட எட்டு தானிய ரகங்களை, 'பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்' அறிமுகம் செய்துள்ளது.
கதிரியக்க பிறழ்வு வளர்தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்ட, மரபணு மாற்றம் செய்யப்படாத இந்த கோதுமை, நெல், எண்ணெய் வித்துக்கள் நாடு முழுதும் விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தும் என, பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஐந்து தானியங்கள் மற்றும் மூன்று எண்ணெய் வித்துக்களின் இந்த புதிய ரகங்கள், எத்தகைய பருவ நிலையையும் தாக்குப்பிடித்து, அதிக மகசூல் தரக்கூடியவை என, அணுசக்தி கமிஷனின் தலைவர் அஜித் குமார் மொகந்தி தெரிவித்தார். உணவு மற்றும் ஊட்டச்சத்து மேம்பாடு மற்றும் விவசாயிகள் வருவாய் அதிகரிப்பில், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் குறிப்பிடத்தக்க பங்களிப்பு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த மையம் கோதுமை ரகத்தை முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளதாகவும், இவை அனைத்தும் தற்போதுள்ள பயிர்களை விட, விரைவான அறுவடை நிலை, நோய் தடுப்பு சக்தி, காலநிலைக்கேற்ற தகவமைப்பு, உப்பு சகிப்புத்தன்மை, அதிக மகசூல் போன்றவற்றை வழங்கும் என்றும் மையத்தின் இயக்குநர் விவேக் பாசின் தெரிவித்தார்.