26க்கு 8 வலி நிவாரணி மருந்துகள் போலி : சுகாதார துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்
26க்கு 8 வலி நிவாரணி மருந்துகள் போலி : சுகாதார துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ADDED : டிச 20, 2024 05:38 AM

பெங்களூரு: கர்நாடக சுகாதார துறையினர் பல்வேறு மருந்துகளை ஆய்வு செய்தனர். இதில், அசிடிட்டி மற்றும் வலி நிவாரணிக்கான 26 மருந்துகளில் 8 போலி என்றும்; 18 மருந்துகளில் தவறான முத்திரை குத்தப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவின் பல்லாரி மாவட்ட மருத்துவமனையில், கடந்த நவம்பரில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஐந்து பெண்கள், பிரசவித்த பின் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து, மாநில அரசு, டாக்டர்கள் தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது. இவர்களின் முதல்கட்ட விசாரணையில், நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட, 'ஐ.வி., குளுகோஸ்' தரமற்று இருப்பதாக சந்தேகம் எழுந்தது.
தயாரிப்புக்கு தடை
குறிப்பிட்ட குளுகோசை ஆய்வுக்கு அனுப்பிய போது, தரமற்ற குளுகோஸ் என்பது உறுதியானது. இதனால், அதிர்ச்சியடைந்த சுகாதார துறை, குளுகோசை வினியோகம் செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்த நிறுவனத்தில், மத்திய மருந்து கட்டுப்பாடு மைய அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தது. அங்கு விதிகளின்படி குளுக்கோஸ் தயாரிக்கப்படாதது தெரியவந்தது.
இதையடுத்து, 'அந்நிறுவனத்துக்கு ஐ.வி., குளுகோஸ் தயாரிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது' என்று சட்டசபை கூட்டத்தொடரில், சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், மாநில சுகாதார துறை, பல்வேறு நிறுவனங்கள் அனுப்பும் மருந்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்தியது.
ரசாயனங்கள்
இது தொடர்பாக, இத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
துறை அமைச்சரின் உத்தரவின்படி, 26 மருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், பொதுவாக பயன்படுத்தப்படும் அசிடிட்டி, வலி நிவாரணி, கொழுப்பு கரைக்க, ஊட்டச்சத்து தரும், மூக்கடைப்பை நிவர்த்தி செய்யும் 18 மருந்து நிறுவனங்கள் தயாரித்த மருந்துகளில், தவறான முத்திரையும், அதில் எட்டு போலி மருந்துகள் என்பதும் தெரியவந்துள்ளது.
பல ஆண்டுகளாக பாதுகாப்பு தரத்தை மீறிய ஐந்து மருந்து நிறுவனங்கள் தண்டனை பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட 12 வழக்குகள், பல்வேறு கட்ட விசாரணையில் உள்ளன. அதுபோன்று சுகாதார துறை பரிந்துரைக்கும் 26 மருந்துகளில், தரமற்ற ரசாயனங்கள் பயன்படுத்தி உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த 26 மருந்துகளில், மூக்கடைப்பை போக்க பயன்படுத்தும் 10 மருந்துகள், சட்டத்தை மீறியது தெரியவந்துள்ளது. அதுபோன்று, கண் வீக்கத்தை குறைக்கவும், வறண்ட கண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் பயன்படுத்தப்படும் நான்கு மருந்துகள், மூட்டு வலி, ஒவ்வாமைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் இரண்டு மருந்துகளில் தவறான முத்திரை குத்தப்பட்டுள்ளன.
எலும்பு மஜ்ஜையில் சிவப்பு, வெள்ளை ரத்த அணுக்களை உருவாக்க கூடிய, 'ஃபோலிக் அமிலம், வைட்டமினுக்கு பயன்படுத்தும் இரண்டு மருந்துகள், நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் இல்லை.
நடவடிக்கை
தவறான முத்திரை குத்தப்பட்ட மருந்துகள், தீங்கு விளைவிப்பதாக இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இதில் அந்நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படலாம். அதேவேளையில், மருந்து பாதுகாப்பாகவும், லேபிள் தவறாகவும் ஒட்டப்பட்டிருந்தால், வழக்கு பதிவு செய்யப்படாது.
குறிப்பிட்ட மருந்தை, அந்நிறுவனம் தயாரிப்பதை நிறுத்தினால், சுகாதார துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படும். மருந்து ஆய்வாளர்களால், அவ்வப்போது ஆய்வுகள் செய்து, மருந்து குறிப்பிட்ட தரத்துடன் உள்ளதா அல்லது தவறான முத்திரை குத்தப்பட்டுள்ளதா என்று பரிசோதிக்கப்படும்.
இதற்காக, நிறுவனங்களில் இருந்து வெளியே செல்லும் மருந்துகளின் மாதிரிகளை, ஆய்வாளர்கள் சேகரிப்பர்.
அதை ஆய்வு செய்ய, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட தரத்துக்கு குறைவாக இருந்தால், அவை போலியானது என்று வகைப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.